( முனைவர் மு.இரமேசு எழுதிய ’எந்தை : பழஞ்சமூக – மொழிப் பண்பாட்டுக் கட்டுரைகள்’ எனும் ஆய்வுநூல் கூறும் சாரம் என்ன என்பதை இங்கு முன்வைக்கிறார், திறனாய்வாளர்)
’எந்தை’ என்கிற சொல், குடிகளின் தலைவன், காதல் தலைவன், அரசத் தலைவன், குடும்பத் தலைவன் ஆகிய பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைமைப்பண்புடைய எவருமே இத்தகைய மதிப்புக்கூட்டப்பட்ட உறவுமுறைக்கு உரியவர் ஆகிறார் என்பதால், இது காரணப்பெயராக விளங்குகிறது.
எந்தை என்ற சொல்லில், ஈறாக உள்ள ‘ஐ’ என்கிற விகுதி, பால்நிலையைத் தெளிவாகக் காட்டுவதில்லை.
நுவ்வை, அன்னை, அவ்வை என்கிற சொற்களில் ஈறாக வரும் ‘ஐ’விகுதிகளும் பால் காட்டுவதில்லை. இடுகுறியாகவே பெண் பாலுக்குரியதாக மரபுவழியாக அறிந்துவருகிறோம்.
அதனால் ‘ஐ’ என்பது சங்க இலக்கியப் பதிவுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்தில், தலைமைப்பண்புள்ள இருபாலரையும் குறித்தது என்று கொள்ளலாம்.
இலக்கியப் பதிவுகளைக் கடந்து மானுடவியல் ஆய்வுகளின்வழி நோக்குகையில், ‘தமிழிய(திராவிட) மானுடவியல்’ களத்தில், இது – ’தாய்வழிச் சமூகம்’ என்ற கருதுகோள், வலுவாக நிலைநாட்டப்பெற்று கண்டடைவாகவும்(finding) ஏற்கப்பட்டுள்ளதால், தொல்பழங்காலத்தில் ‘ஐ’ என்கிற தலைமைச்சுட்டு பெண்ணைக் குறித்திருக்கலாம் என்று ஊகிக்கச் சான்றுகள் துணைசெய்கின்றன.
’ஐ’ என்பது தனியொரு உருபனாக நின்று, பெண்ணைக் குறித்த காலம் போய், ஆணைக் குறிக்கிற காலத்தின் எச்சசொச்சமாக, பாட்டுத்தொகைப் பதிவுகளும் அற இலக்கியப் பதிவுகளும் விளங்குவதைக் காண்கிறோம்.
குழு, குடி, இல்லறம் என வெவ்வேறு அலகுகளின் தலைமையைக் குறிக்கவந்த இந்த ‘ஐ’ எனும் உருபன், வெறும் பின்னொட்டாக மாறிய நிலை, தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தை ஆய்ந்துணர உதவக்கூடிய தரவாகும்.
’ஐ’ என்பதன் பயன்பாடு, பெண்ணைச் சுட்டுவதிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டபின்னும் ‘ஆய், யாய், ஞாய் என்கிற வடிவில் தொடர்வதையும், ஆனால் அது தலைமை என்கிற நிலையினை இழந்து, உறவுநிலைப் பெயராக நிலைபெற்றிருப்பதையும் காண்கிறோம்.
’பெர்ணின்’ என்ற இடத்துக்கு அருகே வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவைக் குறிக்கும்படியான ‘பெல்காய்’ எனும் பெண் தெய்வம் வணங்கப்பட்டுவருகிறது. இது கன்னடத்திலிருந்து பிரிந்திருக்கலாம் என்று கணிக்கிறார், அறிஞர் டி.டி.கோசாம்பி. ஆனால், அதன் மூலநிலையைத் தமிழோடு இணைத்துக் கண்டறியும் வாய்ப்பை அவர் தவறவிட்டுவிடுகிறார்.
வடபுலம் மேலே செல்லச்செல்ல, மெங்காய், மாண்டராய் உதலாய், சம்சாய், கும்பல்சாய் போன்ற ஆற்றல்வாய்ந்த பெண் தெய்வங்கள், ஆய் என்ற விகுதியை ஏந்திக்கொண்டிருப்பதை, கோசாம்பியின் ஆய்வுநூல்களில் காண்கிறோம். ஆனால், அதில் உள்ள ஆய் எனும் ஒட்டு, எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்கிற ஆய்வு அதில் நிகழவில்லை.
அன்னை, எந்தை போன்ற சொற்கள் விளி ஏற்கிறபோது, அன்னாய், எந்தாய் என்று மாறுகின்றன. விளி ஏற்ற ஆய் என்பது திராவிட மொழிகளில் பெண் தெய்வங்களுக்கான சுட்டுப்பெயராக மாறியிருப்பது நோக்கத்தக்கது.
மனிதர்களில் கருவிப்பயன்பாடுகளும் நடத்தைமுறைகளும் உறவுமுறைகளும் அவற்றிற்கேற்ப மொழியும் அதன் விதிமுறைகளும் விரிவடைந்து ஒழுங்கமையக்கூடியன. இது, ஒரு புலத்தைச் சேர்ந்த, பொதுவான மொழிமூல மரபைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவானது என்று கருதுவது ஏற்கத்தக்கதாகும்.
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஐயை கோட்டத்தில் வணங்கப்படும் ‘ஐயை’ என்கிற பெண் தெய்வமும் அதேபோல பாலைத்திணையின் ‘கொற்றவை’ என்கிற பெண் தெய்வமும் ‘ஐ’ விகுதியை ஏந்தியிருப்பதையும் ஒப்பிட்டு நோக்கலாம்.
‘ஐ’ என்கிற குழுவின் தலைமையைக் குறித்த சொல், பின்பு ‘ஆய்’ என்கிற குருதி உறவுக்கான சொல்லாக மாறி, அதனைத் தொடர்ந்து எந்தை என்கிற அரசியல் சொல்லாக வளர்ந்துநிற்பதைக் காண்கிறோம். இது, அரசு தோன்றுவதற்கு முந்தைய பழங்குடி அமைப்பிலிருந்து உச்சரித்துக்கொண்டதே ‘ஐ’ என்கிற கருத்தாக்கம் என்று கணிக்க வாய்ப்பளிக்கிறது.
தொல்குடிகளில் ஆட்சியாளர் என்ற தனியான வர்க்கம் ஏதும் இல்லை. அச்சமூகங்களில் முதன்மையான அலுவல்கள் மூத்தோரால் ஒழுங்குசெய்யப்படுகின்றன. அவருடைய இறப்புக்குப் பின், அடுத்த மூத்தவரால் அவை மேற்கொள்ளப்படும்.
சடங்குசெய்யும் பூசாரிகள், நோய் தீர்க்கும் மருத்துவர் ஆகியோர் சம மதிப்பு உடையவர்களே! இதனையொட்டிய புலையர், பறையர் போன்ற சொற்களும் குழுத் தலைமையை வகித்த மனிதர்களாக அடையாளங்காண சான்றுகள் கிடைக்கின்றன.
புலையர் போன்ற திணைவழிக் குடிகளின் தலைவருக்கு அப்பால், புதிதாக நுழைந்த அயல்குடிகளின் வழிவந்த புரோகிதத் தலைமையும் ‘ஐயர்’ என்ற சொல்லால் தமிழில் சுட்டப்படுவதும், தலைமையைச் சுட்ட ‘ஐ’ என்ற சொல், ஆழமாக வேரிட்டிருப்பதை அறியத் துணைசெய்கிறது.
கருநெல்லி
Add Your Heading Text Here


