/ Mar 07, 2026

அன்றாடத்தில் ஆய்வுசெய்வோம்!

அன்றாடத்தில் ஆய்வுசெய்வோம்

அன்றாடத்தில் ஆய்வுசெய்வோம்!

காலனியத்தை மீள நோக்குதல்!

காலனியத்தின் அரசியல் , பொருளியல் கொள்கைகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. காலனியம் முன்னெடுத்த மொழி அரசியல் குறித்துத்  துலக்கமின்றி  உறங்கிக் கொண்டிருந்த ஆவணங்களில் இருந்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஆய்வாளர் ந.கோவிந்தராஜன் நிகழ்த்தியிருக்கிறார். காலனியத்தின் மொழி அரசியல் ; ஆரிய × திராவிட கருத்துருவாக்க அரசியல்; வடமரபு × தென் மரபு சிந்தனை முறையின் தோற்றப் புள்ளிகள் ஆகியவை குறித்தும் தமிழ் மொழி காலனியத்தின் கற்கை முறைக்குள் வந்த வரலாறு அதனூடாக தமிழ்ப்புலமை மரபு  ஆற்றிய எதிர்வினை ஆகியவை குறித்த விரிவான ஆய்வுகளைத் தாங்கி  ‘ அதிகாரமும் தமிழ்ப்புலமையும் ‘ , ‘மொழியாகிய தமிழ்’ ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாய் தமிழ்ச்சமூகத்தில் காலனியம் ஏற்படுத்திய  புதுமைச் சிந்தனைத் தாக்கம் பற்றிய ஆய்வுகளை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த தெளிவான முடிவினை அறிவிக்கும் வகையில் ‘ வெள்ளை நாக்குகளும் தமிழ்க்காதுகளும் ‘ எனும் நூல் வெளிவந்திருக்கிறது. இந்த மூன்று நூல்களையும் படிப்பவர்களுக்கு அதனுள் ஒரு இணைபிரியாத தொடர்ச்சியிருப்பதைக் காண முடியும்.

 இன்றைக்கு இந்துத்துவ சக்திகள் ‘ காலனிய நீக்கம்’ என்ற பெயரில் ஒரு பார்ப்பனிய பழமைவாத சமூகத்தை  அரசியல் சமூக கருத்தியலாக  முன்வைத்து வரும் சூழலில் அவை பற்றி  இந்த நூல் புதிய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.  இந்நூலின் உள்ளடக்கத்தையும் அது முன்வைக்கும் கருத்துகளையும் சுருக்கமாக இனி பார்ப்போம்.

மொழிகளைக் காலனியப்படுத்துதல்:

அய்ரோப்பியர்கள் குறிப்பாக கும்பெனிகளாக வந்த வெள்ளையர் இந்தியத் துணைக்கண்டத்தை அரசு அதிகார அடிப்படையில் வெற்றிகொண்ட பிறகு தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை ஒரு வேற்று நிலத்தில் தக்கவைப்பதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அவ்வாறான முயற்சிகளில் தலையானது வெற்றிகொள்ளப்பட்ட நிலத்தின் மக்களை ஆள்வதற்கு அம்மக்களின் மொழியை கைவசப்படுத்த எடுத்த முயற்சி முதன்மையானதாகும்.

முதலில் வங்காளத்தை கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியின் வெள்ளை அதிகாரம் வில்லியம் கோட்டைக் கல்லூரியை இந்திய மொழிகளை வெள்ளையர்களுக்குக் கற்பிப்பதற்காகத் தோற்றுவித்தது. தெற்கின்  பாளையக்காரர்களை வீழ்த்திய வெள்ளையர் அதிகாரம்  வில்லியம் கோட்டைக் கல்லூரியைப் போலவே தென்னகத்தின் மொழிகளைக் கற்பிப்பதற்காக சென்னையில் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை நிறுவியது.

 வெள்ளையர் இந்தியத் துணைக் கண்டத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னமே அய்ரோப்பாவின் பல நாடுகளில் இருந்து வணிகத்திற்காகவும் அவர்களோடு சமயப் பரப்புரைக்காகவும் வந்த அய்ரோப்பியர் பலர் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்னகத்திற்கு கடல் வழியாக வருகை தந்துகொண்டிருந்தனர். முதன்முதலாக ஆல்வரோ வேல்ல்லு என்பவரால் கேரள கடற்பயணம் குறித்த அறிக்கை தொடர்பாக நூல் ஒன்று 1497 -1499 ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டது. அதில் போர்ச்சுகீசிய – மலையாள சொற்பட்டியல் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டது. இதில் கோழிக்கோடு பகுதியில் புழங்கும் மொழி எனும் பெயரில் மலையாளம் மமட்டுமல்ல தமிழ் , கன்னடம் ஆகிய மொழிகளின் சொற்களும் இடம்பெற்றன. இவ்வாறு முதன்முதலில் வெள்ளையரின் அதிகார எல்லைக்குள் வணிகத்தின் பெயரில் தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகள்  நுழைந்தன.

பின்னர் அடுத்தடுத்து வந்த சமயப்பரப்புரையாளர்களால் அய்ரோப்பிய மொழிகளோடு ஒப்பிட்டு தமிழுக்கு இலக்கண நூல்கள் வந்தன. சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி நிறுவப்பட்டதும் அய்ரோப்பியரின் புலமை மரபுக்குள் தமிழ் உள்ளிட்ட மொழிகள் நுழையத்தொடங்கின. ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை நிறுவிய எல்லீசால் உருவாக்கப்பட்ட புலமை மரபு தமிழ் இலக்கண  செவ்வியல் மொழிப் புலமையை வெள்ளை அதிகாரிகளுக்குக் கூறிப். தமிழ் , தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு இலக்கணங்களும் ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுக் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டன. இவ்வாறு காலனிய அரசு தனது அதிகாரத்தை தக்கவைக்க மொழிகளைக் கற்றல் அதனில் புலமை பெறுதல் என்ற நோக்கில் மொழிகள் காலனியப்படுத்தப்பட்டன.

சம்பாஷனை நூல்களும் அவை காட்டும் சமூக வரலாறும்

ஒருபுறம் சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி மொழி இலக்கணத்தைக் கற்கும் ஒரு வெள்ளைப் புலமை மரபைத் தெற்கில் உருவாக்கிக் கொண்டிருந்த சூழலில் கோட்டைக் கல்லூரியின் நிறுவனரான எல்லீசின் மறைவிற்குப் பிறகு மொழி இலக்கணங்களைக் கற்கும் போக்குக் கைவிடப்பட்டு மெல்ல வெள்ளையர்கள் உள்ளூர் மக்களை நிர்வாகம் செய்ய அவர்களோடு உறவாடும் அளவிற்குத் தமிழ் கற்றால் போதும் என்ற நோக்கில் சம்பாஷனை எனும் உரையாடல் நூல்கள் தோற்றம் பெற்றன. இது உடனடியாக உள்ளூர் மக்களுடன் உரையாடும் அளவிற்கான சொற்பட்டியலையும் உரையாடல் வாக்கியங்களையும் கேள்வி பதில்கள் என்ற முறையில் எளிமையாகத் தமிழ் கற்றலுக்கா உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் வெள்ளை அதிகாரிகளுக்கு தங்ளிடம் பணிபுரியும் பணியாளர்களிடம் உரையாடுவதற்கும் தங்களின் நிர்வாகப் பணிகளுக்காகத் தமிழ் கற்பதற்கான்உரையீடல் நூல்கள் சம்பாஷனை நூல்களாக வெளிவந்தன. வடக்கில் கல்கத்தா வில்லியம் கோட்டைக் கல்லூரியில் சம்பஷனை நூல்கள்  அச்சிடப்பட்டு உள்ளூர் பேச்சு மொழி கற்பதற்கான நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டாலும் சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் எல்லீசு இருந்த வரையும் அவருக்குப் பிறகும் நீண்ட நாட்களாக கம்பெனி சார்பாக சம்பாஷனை நூல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது. இருந்தபோதுலும் சமயப்பரப்புரையாளர்கள் உருவாக்கிய சம்பஷனை நூல்களும் பிறவும் எழுதி வைத்துப் படிக்கும் மரபு நடைமுறையில் இருக்கவே செய்தது.

சம்பாஷனை நூல் எனும் உரையாடல் நூல்கள் பெரும்பாலும் அதிகாரத் தோரணையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தபோதிலும்கூட அந்த சம்பாஷனை நூல்களில் முதல்முறையாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட , தமிழ்ச்சமூகம் தீண்டாமை காரணமாக காலம்காலமாகத் தள்ளிவைத்து அணுகிய மாந்தர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. குசினிக்காரர்கள் எனும் சமையல்காரர்கள் துரைமார்களின் அடுப்பாங்கரையைச் சுதந்திரமாகக் கட்டியாளும் தன்மை கொண்டிருந்தனர். துணிவெளுப்பவர்கள்  , தையல்காரர்கள் ,முடிவெட்டுவோர் , பல்லக்குத் தூக்கிகள் என பலரும் சம்பாஷனை நூல்களில் துரைகளின் பணியாளர்கள் எனும் பெயரில்  இடம்பெறுகின்றனர்.  இன்னார் சமைத்தால் உண்ணமாட்டோம் என்ற தீண்டாமை அவலநிலை நீடிக்கும் இக்காலத்தில் சமையலர்களாய் பறையர் சாதி மக்கள் துரைகளின் அடுப்பாங்கரையைக் கட்டி ஆளிகிறவர்களாகவும் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும் அவர்கள் செய்வித்த உணவு வகைகள் துரைமார்களால் எந்தத் தயக்கமுமின்றி விரும்பி உண்ணப்பட்டன என்ற செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.  வீட்டிற்குள்ளே அனுமதிக்கப்படாத பலரும் துரைமார்களின் பணியாளர்களாய் துரைகளின் வீடுகளுக்குள் எந்தத் தடையுமின்றித் துரைகளின் ஒப்புதலுடன்  நுழைந்தனர்.துரைகளுடான பழக்கத்தால் வெள்ளை மொழியை சிறிது பழகிக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல கச்சேரி , நில விசாரணை , சமபந்தி தொடர்பான சம்பாஷனை நூல்கள் போன்றவை  வெள்ளையரின் புதுமைச் சட்ட முறைமைகள் குறித்தும் அவைக் குடியானவர்களை முதன்முதலாக ஒரு சமத்துவ மனிதனாக ஏற்று நீதி வழங்கும் நீதிபரிபாலன முறையையும்  வெள்ளையருக்கு முன் நிலவிய பாளையங்கள் மற்றும் மன்னர்களின் நீதி வழங்கும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்பதோடு சாதிக்கொரு நீதியாக அவை சட்டப்படி இல்லாமலிருந்த்தை நினைவுபடுத்துகிறது. வெள்ளையரின் நீதி வழங்கும் முறையில் பல சிக்கல்கள் இருந்தாலும் அவை முன்னேறிய நீதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது என்பதை சம்பாஷனை நூல்கள் நமக்குக் காட்டுகின்றன.

ஆயாக்களின் வழியாக நாட்டார் கதைகள் அச்சேறுதல்

1857 கிளர்ச்சிப் போராட்டத்திற்குப் பிறகு இந்திய மக்களின் மொழி , வரலாறு , பண்பாடு , பழக்கவழக்கம் ஆகியவற்றை மேலதிகமாக கற்றுக்கொள்ள வேண்டிய தேவை வெள்ளையருக்குத் தேவைப்பட்டது. அதனையொட்டிய ஆய்வுகள் தொடங்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்துல் புழக்கத்திலுள்ள மொழிகள் பற்றிய்ஒரு பேராய்ச்சித் திட்டம் எனும் பேரரசுத் திட்டம் உருவானது. அதனைச்செயல்படுத்தும் முகமாக  கிரியர்சன் (1851 -1941) எனும் மொழி ஆய்வாளர் இந்தியா வந்தார். 1894 ல் அவர் பிரிட்டிஷ் அரசு ஒப்புதலுடன் தொடங்கிய மொழிகள் கணக்கெடுப்புப் பணி 1928 ஆம் ஆண்டே நிறைவடைந்தது. இந்தியாவில் புழக்கத்திலுள்ள 723 மொழிகளைத்தென்னாசியாவில் புழக்கத்திலுள்ள மொழிகளாகக்

இந்தியாவில் தங்கிய துரைகளின் குடும்பத்தைக் கவனிக்கும் மிக முதன்மையான பணியை மேற்கொள்ளுவதற்காக ஆயாக்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் துரைகளோடு பழகி ஆங்கிலம் கற்றனர். துரைகளின் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பேணிணர். பலர் துரைகள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத்திரும்பிய போது அவர்களோடு கூடவே போயினர். அவ்வாறு போனவர்களில் பலர் கைவிடவும் பட்டனர். துரைகளின் குடும்பத்தாரோடு சென்ற பல பணிப்பெண்கள் கைவிடப்பட்டு அவர்கள் இலண்டன் விடுதிகளில் கேட்பாரற்று உலவினர் என்பது தனிக்கதை. அத்தகையத் துயரக் கதையிலும் அன்னா போன்ற பணிப்பெண்களும் இருந்தனர்  அன்னா எனும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த மலையாள பணிப்பெண் கூறிய கன்னட நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டு வளர்ந்த பிரிர் எனும் துரைமகள் அன்னா கூறிய கதைகளை தொகுத்து Old Deccan  Days என ஆங்கில மொழியில் நூலாக வெளியிட்டார். முதன்முதலில் அன்னா எனும் பணிப்பெண்ணின் கதையும் அவளுடைய வரலாறும் வெள்ளை உலகிற்குள் துரை மகளின் மூலம் நுழைந்தது. இந்நூல் பல்பதிப்புகளைக் கண்டது. வெள்ளை உலகில் தென்னக நாட்டார் கதைகள் கவனம் பெற்றன. அன்னா பெயர் இல்லாமலே இந்நூல் தமிழில் தக்காணத்துப் பூர்வக் கதைகள் என ராமனுச்சாரியார் என்பவரால் தமிழில் மொழியர் க்கப்பட்டது.கூலிப் பெண் கூறிய கதை என்பதால் தமிழுக்கு வரும்போது அன்னா என்ற பெயரும் இல்லை. வெள்ளையரிடம் இருந்த ஒரு நேர்மை தமிழில் மொழிபெயர்த்தவரிடம் இல்லை என்பது தனியாக எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கிரியர்சனின் பேரரசுத் திட்டமும் தமிழ்ப்பேரறிஞர்களும்

1857 கிளர்ச்சிக்குப் பிறகு இந்திய மக்களைப் புரிந்துகொள்வதிலுள்ள போதாமையை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் புழக்கத்திலுள்ள மொழிகளைப் பற்றிக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியது. கிரியர்சன் 1851-1947 எனும் ஆய்வாளர் இந்தியா வந்தார். 1894ல் தொடங்கிய கணக்கெடுப்புப் பணி 1928 ல் முடிவடைந்தது. 723 க்கு மேலான தென்னாசிய மொழிகள் இந்தியாவில் புழக்கத்திலுள்ளதாக கணக்கெடுப்பில் அறியக் கிடைத்தது. கிரியர்சன் முதன்முதலாக பழங்குடி மொழிகள் அவர்களுடைய உச்சரிப்புகள் , ஒலிக்குறிப்புகள் ஆகியவற்றைச் சேகரித்து பெரிய ஆவணத் தொகுதிகளை வெளியிட்டார். கிரியர்சனின் பணிக்கு முதன்முதலாக கிராமபோன் பயன்படுத்தப்பட்டது. தமிழ் உள்ளிட்ட அதன் கிளைமொழிகளைத் திராவிட மொழிக் குடும்பமாக ஆவணப்படுத்தி இத்தொகுப்பில் வெளியிடப்பட்டது. மக்களின் மொழிகள் முதன்முதலாக வெளிச்சத்திற்கு வந்தன.இந்தக் காலனிய அதிகாரியின் ஆய்வுக்கு நிகராக காலனிய அரசின் கல்வி கற்ற பேரறிஞர்கள் மூவர் சுதேசிகளாக உருப்பெற்றனர்.  முதலில் தமிழ்க்கற்பிக்கும் ஆசிரியர்க் கூட்டத்தை சென்னை கோட்டைக் கல்லூரி் உருவாக்கியிருந்தாலும்

1835 மெக்காலேவின் கல்விக் கொள்கைக்குப் பிறகு இலக்கண அறிவைப் பெறுமளவுக்கு மொழிக் கல்வி வேண்டியதில்லை என வெள்ளையரசு கொள்கை முடிவு எடுத்த பிறகு ஆசிரியர் கூட்டத்தின் மதிப்பு சரியத் தொடங்கியது. தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுக்குத் தமிழ்க் கற்பிக்கும் பணியாளர்களாய் தமிழ் ஆசிரியர்கள் மாறிப்போனார்கள் வெள்ளையரின் ஏளனத்திற்கும் ஆளானார்கள். காலனியத்தின் பொதுக் கல்வி நிலகயங்கள் வளர்ச்சி பெற்ற பிறகு அதிலிருந்த கல்வி கற்று வந்த சுதேச தமிழ் ஆசிரியர்கள் வெள்ளையருக்கு நிகராக ஆய்வுகளைத் தனித்துவமான ஆய்வுகளை மேற்கொள்ளும் போட்டியாளர்களாக  வளர்ந்தனர்.

அவர்களில் நடேச சாஸ்திரியார் (1859- 1906) , இராமனுச்சாரியார் (1866-1940)  ,பூர்ணலிங்கம் பிள்ளை (1866-1947 என மூன்று உள்நாட்டு அறிஞர்களை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். நடேச சாஸ்திரியார் தமிழ் நாட்டார் கதைகளை ஆங்கிலத்தில் தொகுத்து திராவிட  மத்திய காலக் கதைகள் என வெளியிட்டார். வெள்ளை அதிகாரிகளைக் மட்டும் உறுப்பினர்களாகக் கொண்ட இலண்ணடன் நாட்டார் வழக்காற்றியல் கழகத்தில் உறுப்பு வகித்த முதல் தமிழராக இருந்தவர். இராமானுச்சாரியார்  ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு தமிழ்க் கற்கும் மாணவர்களுக்கான செய்யும், உரைநடை அடங்கிய பாடநூலை உருவாக்கித் தந்தவர். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை அதற்காகத் தேர்வு செய்தவராக இருந்திருக்கிறார். அதேபோல தன்னை தமிழ்ப் பண்டிட் இரமானுச்சாரியார் என்றே மிடுக்குடன் அழைத்துக்கொள்ளும் கல்லூரி ஆசிரியராகவும் திகழ்ந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் உழைத்து மஹாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பெருந்திட்டத்தையும் தனியே செயல்படுத்திக் காட்டியவர்.   இவர்களில்  ஒரு அச்சு அசலான சுதேச  தமிழ் ஆய்வாளராக ஆங்கிலக் கல்விச் செருக்குடன் பூர்ணலிங்கம் பிள்ளை திகழ்கிறார். The Primer of Tamil literature ( தமிழ் இலக்கிய அரிச்சுவடி  )  எனும் தமிழிலக்கிய வரலாற்றை ஆறு கட்டங்களாகப் பிரித்து ஆங்கிலத்தில் 1904 ல் வெளியிட்டார் .அவர் காலத்திலிருந்த மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை, இராமசாமி முதலியார் ஆகியோரைப்போலவே  தனித்துவமாக உருவாக்கினார்.

ஆரியர்களின் வரலாற்றை எழுதிய்திலகரைப் போல தமிழ்ச் சமூக வரலாற்றை அதற்கு மறுப்புக் கூறும் வகையில் TAMIL  INDIA எனும் நூலாக முதன்முதலில்  வெளியிட்டார். நீதிக்கட்சியினுடான தொடர்பின் காரணமாக சமக்கிருத இலக்கியங்கள் வில்லர்களாகச் சித்தரித்த சூரபத்மன் , இராவணன் ஆகியோரைப் பற்றியும் நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் வெள்ளை உலகின் ஆராய அறிவுத் திமிருக்குப் போட்டியான நவீன தமிழ் ஆசிரியர்களாக அவர்கள் உருவாக்கிய கல்வி அறிவிலிருந்தே அவர்களுக்குப் போட்டியாக வெளிப்பட்ட சுதேச அறிவுச் செருக்குக்கு எடுத்துக்காட்டுகள் இதனை காலனியப்படுத்தியவர்களை காலனியப்படுத்துதல் என நூலாசிரியர். முன்வைக்கிறார்.

பின்காலனியத்தை மறுத்துரைத்தல்

காலனிய நீக்கம் என்ற கருத்துருவாக்கத்தை விளிம்புநிலை மக்கள் ஆய்வு என்ற தளத்தில் இருந்து பிற்போக்கு இந்துத்துவ சக்திகள் இன்றைக்குக் கையிலெடுத்துள்ளன. காலனியம் ஏற்படுத்திய நவீன சமூகப் பொருளியல் மாற்றங்களைத் தீங்கு என்றும் அது கலானிய கெடுநோக்கில் இருந்து உருப்பெற்றது என்றும் அவ்வாய்வுகளைச் சதிக்கோட்பாடுகளாக மாற்றுகிற ஒரு பழமைவாத வருணசிர சமூக மேலாதிக்கத்தை உருவாக்கும் ஆய்வுகள் நீண்டகாலம் இருந்து வந்தபோதிலும் அவைத் தற்போது உச்சம் பெற்றுள்ளது. காலனியம் மொழித் துறையில் செய்த ஆய்வுகளைப் புறந்தள்ளி ஒரு சமஸ்கிரித மொழி ஆதிக்க மரபை மீட்டெடுக்கும் போக்கும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் காலனியத்தால் உருவான நவீன சமூக மாற்றங்களை காலனியத்தின் சுரண்டல் என அடைமொழியாக்குவதை இந்நூல் மறுத்துரைக்கும் முதன்மையான பணியைச் செய்திருக்கிறது. காலனிய எதிர்ப்பு சுதேசியம் என்பது்பெரும்பான்மை மக்களின் நலவாழ்வுக்கு ஒன்றாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக ஆகிவிடக்கூடாது என்பதைக் காலனியத்தின் ஆவணங்களில் இருந்து மீட்டுருவாக்கி முன்வைக்கிறது. காலனியத்தினை அணுகுவதில் இருபோக்கினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதனுடைய சுரண்டல் ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்ப்பதோடு அதன்  சமூக சனநாயக மாற்றங்களுக்கான நவீனக் கருத்தியலை நாம் வரவேற்க வேண்டும் என்பதாக இதுவரை நிலவிவந்த காலனிய ஆய்வுகள் பற்றிய முன்முடிவுகளை தீர்க்கமான முறையில் முடிவுகட்டியிருக்கிறது. இந்த மொத்த நூலின் உள்ளடக்கம் நூலாசிரியரின் முந்தைய ஆய்வுகளும் இவையே நமக்கு மீள நினைவூட்டுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. கல்வி, ஆய்வுப் புலத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பின்காலனிய ஆய்வுகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய்தை நூலாசிரியர் தமது ஆய்வுகளின் வழி உறுதிசெய்திருக்கிறார். நூலாசிரியரி் ஆவணங்களை முதலில் முன்வைத்து அவற்றிலுள்ள கருத்துகளை மெல்ல வெளிப்படுத்தி பின்னர் இறுதி முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் மாய எழுத்து நடையைக் கையாண்டிருப்பது தமிழ் ஆய்வுலகில் ஒரு புதிய எழுத்து முறையை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது என்பது தனிச்சிறப்பு.

குமரன்

மற்றவை