உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு
ஸ்மித்தினுடைய ஆரம்ப விமரிசகர்கள் பொதுவாக அவருடைய முறைகளையும் கருத்துக்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அவருடைய செல்வாக்கு – குறிப்பாக ரிக்கார்டோவுடன் இணைந்து – பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் மிகவும் அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு நிலைமை மாறியது. ஒரு பக்கத்தில் மார்க்சியம் தோன்றியது. மறு பக்கத்தில் எழுபதுக்களில் அரசியல் பொருளாதாரத் துறையில் அகநிலை மரபு தோன்றி வெகு சீக்கிரத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் மேலாதிக்கம் பெற்றது.
ஸ்மித்தைப் பற்றி “கடுங்கண்டிப்பான” அணுகுமுறை பின்பற்றப்பட்டது; இயற்கையாகவே அவருடைய மதிப்புத் தத்துவம் அதற்கு முதல் பலியாயிற்று. ஆனால் இது உடனே நடந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் பாதியில் பிரபலமான முதலாளித்துவப் பொருளியலாளராக இருந்த அ. மார்ஷல் ரிக்கார்டோவின் போதனையுடன் ஒரு இணைப்பை நீடித்து வைத்துக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் புதிய அகநிலைக் கருத்துக்களோடு சமரசப்படுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளைச் செய்த வராவார். அவர் ஸ்மித்தைப் பற்றி, “மதிப்பைப் பற்றி அவருடைய சமகாலத்தவர்களான பிரெஞ்சு, ஆங்கில சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் ஊகங்களை இணைத்தும் வளர்த்தும் கொண்டு சென்றதே அவர் செய்த முக்கியமான பணி”(1) என்று எழுதினார்.